பாலின சமத்துவக் கல்வி
அமெரிக்காவில் கடந்த ஆண்டு தொடங்கி, இன்று தமிழகம் வரை பரவியிருக்கும் மீடூ இயக்கம், பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாலினக் கல்வி சார்ந்த முக்கியத்துவத்தை மீண்டும் நினைவூட்டியுள்ளது. பாலின சமத்துவ உணர்வு, பாலின பன்மைத்துவ அங்கீகாரத்துக்கான கல்வியைப் பள்ளிகளிலேயே கற்றுக்கொடுக்கத் தொடங்கியதன் மூலம் ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையே மரியாதையான உறவு நிலையை ஏற்படுத்த முடியும் என்ற நிலையை ஐரோப்பிய நாடுகள் உருவாக்கியுள்ளன.
பெருநிறுவன வேலைச்சூழல்களில்கூடப் பெண்கள் சமமானவர்கள் என்பது ஏட்டளவிலான புரிதலாகவே இருக்கிறது; ஆனால், நடைமுறையில் அதை ஏற்கும் மனநிலை இல்லை என்கிறார் நடத்தை உளவியலாளரான ஹாலாஸ்யம் சுந்தரம். “பெருநிறுவனங்களில் நடக்கும் ஊழியர் கூட்டங்களில் இன்னும் பெண் ஊழியர்கள் சொல்லும் யோசனைகளை ஆண்கள் தீவிரமாக கேட்பதில்லை. அவர்கள் வேண்டுமென்றே அலட்சியமாக இருக்கிறார்கள் என்று சொல்ல மாட்டேன்.
ஆனால், பெண் தொடர்பான புறக்கணிப்பு அவர்களிடம் காணப்படுகிறது. அத்துடன் ஒரு பெண் தனது வேலைச்சூழலில் தன் திறன்களையும் யோசனைகளையும் கவனப்படுத்துவதற்கு ஆணாக மாற வேண்டிய நிலையும் உள்ளது. ஆண்களைப் போல உரக்கக் குரல் எழுப்ப வேண்டும். ஒரு பெண்ணின் யோசனையோ திறனோ ஏற்கப்பட அவளது தோற்றமும் முக்கியமான அம்சமாக ஆண்களிடம் கருதப்படுகிறது.
இந்த நிலைமைகளிலிருந்து விடுபட ஒரு ஆண், முதலில் பெண்ணின் நிலையிலிருந்து அவளைப் பார்க்கும் பக்குவத்தை அடைய வேண்டும். ஆணின் சிந்தனை முறையும் பெண்ணின் சிந்தனை முறையும் வேறு வேறு என்பதை அவன் தெரிந்துகொள்ள வேண்டும். ஆண் ஒன்றுக்குப் பிறகு ஒன்று என்ற நேர்கோட்டுச் சிந்தனையை (Linear Thinking) உடையவன்.
பெண்களோ வெவ்வேறு சாத்தியங்களையும் சேர்த்துப் பார்க்கும் இணைச் சிந்தனையைக் (Lateral Thinking) கொண்டவர்கள். இதையெல்லாம் புரிந்துகொள்வதற்கான கல்வி வீட்டிலிருந்தும் பள்ளியிலிருந்தும் தொடங்கப்பட வேண்டும்.
இருபாலர் பள்ளியே சிறந்தது
பாலினக் கல்வி தொடர்பாக சர்வதேச அளவில் யுனெஸ்கோ சமீபத்தில் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில், பாலியல் நடத்தைக் கல்வி ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை விளக்குகிறது. எந்த மாதிரியான சூழ்நிலையில் உடலின் அங்கங்களை அந்தரங்கமாக வைக்க வேண்டுமென்பதில் தொடங்கி தனக்கு ஏற்படும் உணர்வுகளைப் புரிந்துகொள்தல், அதை வெளிப்படுத்தும் நடைமுறை தொடர்பான அறிவு, நம்பத் தகுந்த இடங்கள், நபர்களை அடையாளம் காணும் திறன் ஆகியவை இந்தக் கல்வியால் அதிகரிப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
ஆணுக்கும், பெண்ணுக்கும் சிறுவயதிலிருந்து சேர்ந்து பழகுவதற்கான வாய்ப்பு இல்லாத சூழலிலேயே வன்முறைகள் அதிகம் நடைபெறுவதாக ஐ.ஐ.டி. பேராசிரியை கல்பனா கூறுகிறார்.
பாலின சமத்துவத்தைப் பேசுவதற்கும் பழகுவதற்கும் சிறந்த இடம் பள்ளிகள்தாம். திறன்கள், தகுதிகள், தரநிலைகளில் இருவரும் சமமானவர்களே என்று தெரிந்துகொள்வதற்கு இருபாலர் பள்ளிகள் சிறந்தவை. இரண்டு பாலின மாணவர்களையும் பிரித்துவைக்கும்போது பெண்களும் தங்களைப் போன்றவர்கள் என்ற சமநிலை வருவதற்கான சூழல் இல்லாமல் போகிறது.
விளையாட்டு வகுப்புகளில் இருபாலின மாணவர்களும் சேர்ந்து விளையாடுவதற்கு ஊக்குவிக்கப்பட வேண்டும். இன்னொரு பாலினத்தவர் தொடர்பாக மற்றவருக்கு எழும் கேள்விகள், பயங்கள், சந்தேகங்கள் போன்றவற்றை அவர்கள் கேட்பதற்கும் பகிர்ந்துகொள்வதற்குமான பயிலரங்குகளை நடத்த வேண்டும்.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தனியார் கல்லூரிகளில் மாணவர்களும் மாணவிகளும் பேசுவதற்குக் கூட அனுமதி இல்லை. இது சமத்துவமில்லாத ஆரோக்கியமற்ற சமூக நிலையையே உருவாக்கும் என்கிறார் பேராசிரியை கல்பனா.
பள்ளி அமைப்பின் வெளியே பாலினக் கல்விக்கான அடித்தளம்.
சமத்துவ சிந்தனை வேண்டும்
சாதி, மதம், வர்க்கம் என்று எல்லா வகையிலும் சமத்துவச் சிந்தனை உணர்வை வளர்ப்பதன் மூலமே பாலின சமத்துவக் கல்வியை வெற்றிகரமாக்க முடியும் என்கிறார் மகளிரியல் துறைப் பேராசிரியர் என்.மணிமேகலை.
வெறுமனே படித்து தேர்வெழுதிக் கடந்துபோவதற்கல்ல பாடங்கள். ஆண் – பெண் சமத்துவ உணர்வு மட்டுமின்றி, சாதி, மதம், வர்க்கம் என எல்லா நிலையிலும் சமத்துவ சிந்தனையும் உணர்வும் வளர்க்கப்பட வேண்டும். இத்தகைய மனப்பாண்மை ஆசிரியர்களுக்கும் இருக்க வேண்டும்.
ஆனால், நடைமுறையில் சூழ்நிலை அவ்வளவு சிறப்பாக இல்லை. பெண்கள் அணியும் உடை தொடர்பான பார்வைகூட இன்னமும் கல்லூரி, பல்கலைக்கழகச் சூழலில் மாறவில்லை. கல்வி, வேலை சார்ந்து பெண் வீட்டை விட்டு வெளியே போவதை ஏற்றுக்கொண்ட சமூகத்தில் அவள் சமம், எல்லா உரிமைகளும் அவளுக்கும் உண்டு என்ற ஏற்கக்கூடிய மனம் இன்னும் வரவில்லை.” என்றார்.
பாலுறவு, பாலீர்ப்பு பற்றிய புரிதல், பரஸ்பர மரியாதை அடிப்படையில் எதிர்பாலினத்தவருடனான உறவு ஆகியவை குறித்த கல்வியை வீடு, பள்ளி, கல்லூரி நிலையில் மட்டுமல்லாது சமுதாயத்தின் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படவேண்டும்.
பள்ளி அமைப்பின் வெளியே பாலினக் கல்வி:
பாலின சமமின்மை என்பது பெண்களுக்கான பிரச்னை மட்டுமல்ல அது சமூகம் சார்ந்த பிரச்னை ஆகும். எனவே, ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலினக் கல்வியை கற்பிப்பதினால் சமமின்மையை நீக்கலாம். சமமின்மை என்பது சமூகத்தில் ஜாதி, வகுப்பு மற்றும் சமுதாயங்கள் போன்ற அனைத்திலும் ஊடுருவி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆகவே அணைத்து தரப்பு மக்களுக்கும் பாலினம் பற்றிய கல்வியை கொடுப்பதற்கு பள்ளிக்கூடம் என்னும் கட்டமைப்புக்கு வெளியே அமைத்தல் அவசியமாகிறது. இவ்வாறு பாலினக் கல்வியை அமைப்பதற்கு பல வழிகள் இருக்கின்றன.
குடும்பம்:
குடும்பம் என்பது ஒரு சமூகத்தின் முதன்மை அலகாகும். இதனால், குடும்ப உறுப்பினர்களால் கல்வி கற்பிக்கப்படுவது முதன்மை கல்வியாளர்களிடமிருந்து கற்பது எனப்படுகிறது.
குடும்ப உறுப்பினர்கள் தங்களது பெண்களிடம் பாலின வேறுபாட்டுடன் நடந்து கொள்வதை தவிர்த்து குழந்தைகளுக்கு பாலினத்தை கற்பிக்கலாம்.
சமுதாயம்:
பாலின சமத்துவம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சம அந்தஸ்தை சமூகத்தில் வழங்குவதால் மட்றவர்களுக்குக் கற்பிக்கலாம்.
சமூகத்தை வழிநடத்தும் தலைவர்கள் சமூகத்திலுள்ள உறுப்பினர்களைக் கொண்ட கூட்டங்கள் அடிக்கடி கூட்டி பாலின சமத்துவத்தைப் பற்றிய கல்வியை அளிக்கலாம்.
விழிப்புணர்வு:
சமூகத்தின் இளைஞர்கள் பல்வேறு வகையான பாலினம் பற்றிய உணர்வூட்டம் பிரச்சாரம், பயிற்சிப்பட்டரை, திட்டங்கள் மற்றும் இன்னபிரவற்றிலிருந்து பாலினம் என்பதைக் கற்றுக் கொள்ளலாம்.
ஒப்பார் குழு:
ஒத்த வயதுடைய குழந்தைகளின் அல்லது இளைஞர் குழுவில் ஆண்கள் மற்றும் பெண்களை இடம் பெறச்செய்து அதன் மூலம் பாலின சமத்துவம், பாலின வேறுபாடு, சமூக வார்ப்புகள் மற்றும் சமூகபாலினத்தவரின் சமூகப்பங்கேற்பு போன்றவைகளை கற்பிக்க பொருத்தமான அமைப்பை ஏற்படுத்துதல் பாலினக் கல்விக்கான சிறந்த அமைப்பாக கருதப்படுகிறது.
பண்பாடு மற்றும் கலாச்சாரம்:
கலாச்சார வாழ்க்கையில் ஆண்களும், பெண்களும் சமவாய்ப்பையும் சமமான அணுகுதலையும் பெற்றவர்களாக இருப்பதாகக் கருதவேண்டும். பாலின தொடர்புகள் மூலம் சமூகப்பாரம்பரியமும் சமூகத்திலுள்ள ஆக்கபூர்வமான செயல்பாடுகளும் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கொடுக்கப்படுகிறது. சமூகத்திலுள்ள கலாச்சாரம் சார்ந்த கதைகளை படிப்பதின் மூலமும் பாலின சமத்துவத்தை கற்றுக்கொள்ள குழந்தைகளுக்கு வாய்ப்பு உண்டு.
No comments:
Post a Comment